×

பல்வேறு சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்பு

கடலூர், மார்ச் 10:  கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நேற்று இரண்டாவது நாளாக மாசி மகத்திருவிழா நடந்தது. அங்கு நேற்று காலை எழுந்தருளிய திருக்கோவிலூர் உலகளந்தபெருமாளுக்கு தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்.கடந்த மார்ச் 4ம் தேதி அன்று திருக்கோவிலூரில் இருந்து புறப்பட்ட உலகளந்த பெருமாள் பாவந்தூர், மேட்டுக்குப்பம், பெரியசெவலை, திருவாமூர், மேல்பட்டாம்பாக்கம், பில்லாளி வழியாக நேற்று முன்தினம் கடலூரில் எழுந்தருளினார். அவருக்கு பில்லாளி நம்மாழ்வார் ராமானுஜம் கூடத்தில் கருடசேவை நடந்தது. சாலைக்கரை மத்மணவாள மாமுனிகளுடன் புறப்பாடு செய்து அன்றிரவு திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோயிலுக்கு வந்தடைந்தார்.
 நேற்று காலை அங்கிருந்து புறப்பாடாகி உலகளந்த பெருமாள் தேவனாம்பட்டினம் கடலில் காலை 9 மணிக்கு எழுந்தருளினார். வரும் வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து உலகளந்த பெருமாளை வழிபட்டனர். தேவனாம்பட்டினத்திற்கு வந்ததும் அக்கிராம மக்கள் திரண்டு வந்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து கடற்கரையில் எழுந்தருளிய அவருக்கு சிறப்பு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். உலகளந்தபெருமாளை பார்ப்பதற்காகவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் தேவனாம்பட்டினம் மாசி மகத்திருவிழாவிற்கு நேற்று வந்திருந்தனர். உலகளந்தபெருமாளுக்கு நேற்று முன்தினம் இரவு திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.   
 
  பல்வேறு சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்பு:  பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை முழுக்குத்துறையில் மாசிமக உற்சவ  திருவிழா நேற்று இரண்டாவது நாளாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று வட்டார  கிராமங்களை சேர்ந்த ஏராளமான சாமிகள் முழுக்குத்துறை கடற்கரைக்கு கொண்டு  வரப்பட்டது. பின்னர் அங்கு சாமிகளுக்கு படையல் நடத்தி தீர்த்தவாரி நடந்தது.  அப்போது முழுக்குத்துறை கடலில் ஏராளமானோர் குளித்து சுவாமிகளை வழிபட்டனர்.  விழாவின் முக்கிய அம்சமாக முஷ்ணம் பூவராகசாமி தீர்த்தவாரியில்  பங்கேற்றது. பூவராகசுவாமிக்கு முழுக்குத்துறை கடற்கரைப் பகுதியில்  தீர்த்தவாரி கொடுக்கப்பட்டு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான  பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதுபோல் பரங்கிப்பேட்டை அருகே  உள்ள சி.புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை, அய்யம்பேட்டை,  பெரியகுப்பம் உள்ளிட்ட பல இடங்களிலும் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில்  ஏராளமான சாமிகள் பங்கேற்று தீர்த்தவாரி நடத்தி பக்தர்களுக்கு அருள்  பாலித்தனர்.   

தெப்பத்திருவிழாவில் 50 ஆயிரம் பேர் தரிசனம்:    மாசி மகத்தை முன்னிட்டு கடலூர் துறைமுகத்தில் உள்ள உப்பனாற்றில் நடைபெறும் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.  நேற்று முன்தினம் இரவு அங்கு நடந்த மாசிமகத்திருவிழாவில் அக்கரைகோரியை சேர்ந்த வெங்கடேசப்பெருமாள், சிங்காரப்பேட்டை வெள்ளரியம்மன், அக்கரைகோரி கண்ணணூர் அம்மன், சலங்கைகாரத்தெரு நாகமுத்து அம்மன், ஆற்றங்கரை வீதி ஏழை மாரியம்மன் ஆகிய 5 சுவாமிகளும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது. துறைமுகப்பகுதி கலங்கரை விளக்கம் அருகிலிருந்து தெப்பல் உற்சவம் துவங்கி சோனங்குப்பம் மீனவர் கிராமம் வரை நடைபெற்றது. உப்பனாற்றின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மாசிமக தெப்பல் திருவிழாவை கண்டுகளித்தனர். இது போல் வாணவேடிக்கைகள் களைகட்டின. விரிவான காவல்துறை பாதுகாப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags : Swamis Tirthavari ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...